search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசு கேவியட் மனு"

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கக்கோரி நேற்று தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரிய டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சில மாதங்களுக்கு பிறகு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரது தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 14-ந் தேதி வழங்கப்பட்டது. அப்போது 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். அதாவது 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் தீர்ப்பு வழங்கினர்.

    இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதியாக, நீதிபதி விமலா அறிவிக்கப்பட்டார்.

    இதற்கிடையே, ‘இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்தால் காலதாமதமாகும் என்றும், இதனால் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்றும் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 பேர் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    இதுகுறித்து மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வு முன் ஆஜராகி, 17 பேரின் மனுக்களையும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

    அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 27-ந் தேதி (இன்று) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர்.

    இந்தநிலையில், இந்த வழக்கின் விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொண்டு, முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா தாக்கல் செய்தார்.

    ×